பெங்களூருவில், மண்வெட்டியுடன் நிர்வாணமாக நடமாடிய வாலிபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து, வாகனங்களை சேதப்படுத்தி, உள்ளே நுழைய  முயன்ற பரபரப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெங்களூரு, ஆவலஹள்ளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சீமசந்திரா பகுதியில் உள்ள கே.ஆர். டிபென்ஸ் லேஅவுட் அருகே ஒரு வீட்டில் தாய் மற்றும் மகள் இருவரும் வசித்து வருகின்றனர். கடந்த இரவு, யாரோ வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டதை தொடர்ந்து, இருவரும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தனர்.

அப்போது, ஒருவர் நிர்வாண நிலையில், கையில் மண்வெட்டி வைத்தபடி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதற்கும் மேலாக, அவர் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததோடு, வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை சேதப்படுத்தினார்.

பின்னர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்ற அவர் நடவடிக்கையைப் பார்த்த தாய், மகள் இருவரும் கூச்சலிட துவங்கினர். அவர்கள் அலறும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, ஆவலஹள்ளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஜெஸ்ஸி என்பது தெரிய வந்த நிலையில் அவர் எதற்காக நிர்வாணமாக வீட்டிற்குள் நுழைய முயன்றார் என்பதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.