அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி  அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க. பல்வேறு கோணங்களில் உடைந்தது. ஆரம்பத்தில் இரு அணிகளாகப் பிரிந்த எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம், பின்னர் மீண்டும் இணைந்தனர். ஆனால் மீண்டும் சலசலப்புகள் வலுப்பெற்று, ஓ.பி.எஸ். தனித்து செல்லும் நிலை உருவானது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.  தோல்வியடைந்தது, இது கட்சியில் உள்ள குழப்பங்களை மேலும் வெளிக்கொணர்ந்தது. இதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வதை எடப்பாடி பழனிசாமி முற்றிலும் மறுத்துவிட்டார்.

இதற்கிடையில், கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன், பழனிசாமியின் அணுகுமுறையால் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு கட்சியில் கிடைத்துவந்த முக்கியத்துவம் குறைக்கப்பட்டதையடுத்து, அவர் சமீபத்திய கட்சித் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வந்திருக்கிறார்.

“வருகிற 5ம் தேதி நான் மனம் திறந்து பேசுவேன். அதுவரை பொறுமையாக இருக்கவேண்டும்” என்றுசெய்தியாளர்களிடம் தெரிவித்த செங்கோட்டையன், முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவிருக்கிறார் என கூறப்படுவதால், அ.தி.மு.க. அரசியலில் புதிய திருப்பம் ஏற்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகலாம் என்றும், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பிரிந்து கிடக்கும் சக்திகளை ஒருமித்த கணமாக மாற்ற, ஒரு புதிய அணி உருவாகலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தி.மு.க.வில் செங்கோட்டையன் இணைய வாய்ப்பு குறைந்துள்ளதாக, எதிரொலிக்கிறது. அதே சமயம் விஜயின்  கட்சியில்  இணைவதற்கான வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பதற்காக, அனைத்துப் பிரிவுகளும் ஒன்று சேரவேண்டும் என்று சசிகலா எழுதிய கடிதத்துக்குப் பிறகு, பல தலைவர்கள் இடையே தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து, தமிழக அரசியலில் புதிய கூட்டணிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.