87 வயதான முதியவரை ஒரு பெண் அடிக்கும் காட்சி காணப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் கடந்த சனிக்கிழமை வைரலாக பரவியதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றிய விசாரணை நடைபெற்றது.
இந்த வீடியோ உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரதாப்கர் மாவட்டத்திலுள்ள சராய் கல்யாண்தேவ் பகுதியில் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடிக்கப்படும் முதியவர், அவரது மருமகனின் மாமனார் என்றும் கூறப்படுகிறது.
வீடியோ பரவியதை அடுத்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று முதியவர், அவரது மருமகள் மற்றும் கிராம மக்களிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
பாதிக்கப்பட்ட முதியவர் விஸ்வநாத் திவாரி (87) திருமணமாகாதவர். தற்பொழுது, அவர் தனது மருமகன் ஓம்கார்நாத்தின் வீட்டில் தங்கியுள்ளார். ஓம்கார்நாத் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சுனிதா திவாரி, குழந்தைகள் மற்றும் விஸ்வநாத் திவாரியுடன் வீட்டில் வசித்து வருகிறார்.
சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில், சுனிதா திவாரி தனது கணவரின் மாமாவை அடிக்கிறார். இருப்பினும், அந்த வீடியோவில் உள்ள உரையாடலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இது தொடர்பாக விசாரித்த போலீசாரிடம் கிராம மக்கள் தெரிவித்ததாவது, “விஸ்வநாத் திவாரி மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கிறார். வீட்டில் அவரை கவனிப்பது அவரது மருமகள் சுனிதா மட்டுமே. கோபத்தின் காரணமாகவே அவர் முதியவரை அடித்ததாகவும், அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்” என்றனர்.
மேலும் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ஆனந்த்பால் பதௌரியா கூறுகையில், “முதியவரின் மனநிலை சரியில்லாதது குறித்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். வீடியோவை மையமாகக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
