ஜப்பானில் 60 வயது வித்தியாசத்தில் உருவான காதல் கதை சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 23 வயது மாணவர் கோஃபு, தனது வகுப்புத் தோழியின் 83 வயது பாட்டி ஐகோவுடன் கடந்த ஆறு மாதங்களாக காதலில் இருக்கிறார். ஐகோவின் வீட்டிற்கு சென்றபோது முதல் பார்வையிலேயே காதல் மலர்ந்ததாக கூறும் இந்த ஜோடி, தெரு நேர்காணலில் பேசிய பிறகு ஒரே இரவில் பிரபலமாகியது.

ஐகோ, இரண்டு முறை திருமணமாகி, ஒரு மகன், மகள் மற்றும் ஐந்து பேரக்குழந்தைகளை உடையவர். விவாகரத்து பெற்ற பிறகு, மகனின் குடும்பத்துடன் வசித்து வந்தார், அதேவேளை கோஃபு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து, ஒரு கிரியேட்டிவ் டிசைன் நிறுவனத்தில் இன்டர்னாக பணியாற்றி வருகிறார்.

கோஃபுவின் உற்சாகமான இயல்பும், மென்மையான பண்பும் ஐகோவை கவர்ந்தனவாம். “இவ்வளவு உயிரோட்டமான இளைஞரை பார்த்ததில்லை,” என ஐகோ கூறினார். ஆரம்பத்தில், வயது வித்தியாசம் காரணமாக இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்த தயங்கினர்.

ஆனால், ஐகோவின் பேத்தி ஏற்பாடு செய்த டிஸ்னிலேண்ட் பயணத்தில், அவர் கடைசி நிமிடத்தில் வராமல் விலக, இருவரும் தனியாக சென்றனர். சிண்ட்ரெல்லா கோட்டையின் மாலைப்பொழுதில் கோஃபு தனது காதலை வெளிப்படுத்த, “அந்த நொடியில் நான் முற்றிலும் மயங்கிவிட்டேன்,” என ஐகோ உருக்கமாக கூறினார்.

தற்போது ஒன்றாக வசிக்கும் இந்த ஜோடி, தங்கள் உறவுக்கு இரு குடும்பங்களும் ஆதரவு அளித்ததாக தெரிவித்தனர். திருமணம் குறித்து பேசவில்லை என்றாலும், கோஃபுவுக்கு ஐகோவின் முகத்தை காலையில் பார்ப்பதே மகிழ்ச்சி என்றும், ஐகோவோ, அவர் வேலைக்கு செல்லும்போது தனிமையாக உணர்ந்தாலும், அவருக்கு சமைப்பது தனக்கு உற்சாகம் தருவதாகவும் கூறினார்.