மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டம் வாடி கிராமத்தைச் சேர்ந்த விஜய் ரத்தோட் (35), சோனாபூர் தாண்டா கிராமத்தைச் சேர்ந்த வித்யாவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு மனைவியின் நடத்தை குறித்து சந்தேகம் கொண்ட விஜயும், வித்யாவும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு கடுமையான வாய்த்தகராறைத் தொடர்ந்து, “இனிமேலும் உன்னுடன் வாழ முடியாது” என்று கூறிய வித்யா தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜய், தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் மனைவியின் புகைப்படத்துடன் இரங்கல் செய்தியை பதிவிட்டார். இது வித்யா மற்றும் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், சமீபத்தில் விஜய் தனது மனைவியை சமாதானப்படுத்துவதற்காக அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. “என் புகைப்படத்தை வைத்து எப்படி இரங்கல் செய்தி வெளியிட முடியும்?” எனக் கேட்டு வித்யா கணவருடன் சண்டையிட்டார்.
தகராறு உச்சத்துக்கு சென்றதால், ஆத்திரமடைந்த விஜய் ரத்தோட் கத்தியால் வித்யாவை மார்பு, வயிறு, முதுகு உள்ளிட்ட இடங்களில் 12 தடவைகள் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த வித்யாவை உடனடியாக உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விஜய் ரத்தோட்டை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், வரதட்சணை கேட்டு வித்யாவை அடிக்கடி கொடுமைப்படுத்தியதாக அவரது மாமியார் மற்றும் மைத்துனர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரிதாப சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
