பீகார் மாநிலம் சிவானைச் சேர்ந்தவர் விகாஸ் குமார். இவருக்கு 30 வயது ஆகிறது. வெளிநாடுகளில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்த விகாஸ் குமார் வேலை இல்லாததால் இந்தியாவிற்கு வந்துவிட்டார். பின்னர் தனது தாயுடன் சூரத்திற்கு வந்து அத்தை வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவரது அத்தை தொடர்ந்து வேலை தேடுமாறு விகாஸ் குமாரை வற்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் கோபம் அடைந்த விகாஸ் குமார் அத்தையின் மூன்று வயது மகனை கடத்தி சென்று மும்பை லோகமான்ய திலக் டெர்மினஸ் வரை செல்லும் குஷி நகர் விரைவு ரயிலில் ஏறியுள்ளார். பின்னர் சிறுவனை கொலை செய்து கழிவறையில் இருந்த குப்பை தொட்டியில் உடலை வீசியது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விகாஸ்குமாரை கைது செய்து விசாரணை நடத்திய போது அத்தை வேலை தேட சொல்லி தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் கோபத்தில் சிறுவனை கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்து குப்பை தொட்டியில் வீசியதை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.