ஆந்திர மாநிலம் கம்பம் மாவட்டம் கல்லூர் முடிச்சாவரத்தை சேர்ந்த லட்சுமி பிரசன்னா (வயது 33) என்பவருக்கு, 2015-ம் ஆண்டு நரேஷ் பாபுவுடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது 2 ஏக்கர் மாந்தோப்பு, 1 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் ரூ.10 லட்சம் பணம் வரதட்சனையாக வழங்கப்பட்டது. இத்தம்பதிக்கு பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் நரேஷ் பாபு மனைவி மற்றும் குழந்தையுடன் 6 ஆண்டுகள் மாமியார் வீட்டில் தங்கியிருந்தார். பின்னர் அஸ்வராபேட்டையில் உள்ள தன் சகோதரி பூ லட்சுமி வீட்டுக்கு குடிபெயர்ந்து வாழத் தொடங்கினார்.
இதன்பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக லட்சுமி பிரசன்னாவிடம் கூடுதல் வரதட்சனை கேட்டும், உணவு கொடுக்காமல் வறட்சியான முறையில் அடைத்தும், உடல் முழுவதும் சூடு வைத்து சித்திரவதை செய்தும் கொடூரமாக தவிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த சித்திரவதையால் லட்சுமி பிரசன்னா முழுமையாக மெலிந்து, எலும்புக்கூடு போல் மாறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது மாமனாருக்கு தொலைபேசியில் நரேஷ் பாபு அழைத்து, “உங்கள் மகள் படிக்கட்டிலிருந்து கீழே விழுந்து காயமடைந்து ராஜ மகேந்திரவரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.
இதையறிந்த லட்சுமி பிரசன்னாவின் பெற்றோர் அதிர்ச்சியுடன் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள், லட்சுமி பிரசன்னா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உடலை பார்த்ததும் அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்து இருந்ததோடு, புதிதாகவும் பழையதாகவும் சூடு வைக்கப்பட்ட தடயங்கள் இருந்தது. இதனால் கதறிய பெற்றோர், வெங்கடேஸ்வர ராவ் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் மர்ம மரணமாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள நரேஷ் பாபு, அவரது சகோதரி பூ லட்சுமி, தாய் விஜயலட்சுமி மற்றும் மைத்துனர் சீனிவாச ராவ் ஆகியோரை தேடி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலை எழுப்பியுள்ளது.
