டெல்லியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். கதாநாயகியாக நடிக்க விரும்பிய அவர், திரைத்துறையை சேர்ந்த பலருக்கு தன் சுயவிவரங்களை அனுப்பி வந்துள்ளார்.

இந்நிலையில், ஒருவர் தொலைக்காட்சி தொடரில் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகக் கூறி அவரை தொடர்பு கொண்டார். மேலும் சிலரின் மொபைல் எண்களை வழங்கி, அவர்களிடம் பேசுமாறு கூறினார். தொடர்பு கொண்ட மாணவிக்கு, நடிப்பதற்கான வாய்ப்புக்கு ரூ.24 லட்சம் தேவையென கூறி பணம் பெற்றுள்ளனர். இதனை நம்பிய மாணவி, தன் பெற்றோரிடம் பணம் வாங்கி அந்த கும்பலிடம் வழங்கியுள்ளார்.

பணம் பெற்றதையடுத்து மாணவியின் தொடர்பை துண்டித்த அந்த கும்பலை அணுக முடியாமல் தவித்த மாணவி, ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததும் நேரில் சென்று போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவசரமாக விசாரணை மேற்கொண்டு லக்னோவைச் சேர்ந்த தருண் சேகர் சர்மா மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஆஷா சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் திரைத்துறையை நம்பி கனவு காணும் பல இளம் மனங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.