மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் மாகாணத்தின் குசாரா மாவட்டத்தில், ஈரானிலிருந்து நாடு திரும்பிய ஆப்கானிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் லாரியை மோதியது. இந்த மோதலால் பேருந்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 79 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் 19 குழந்தைகள் மற்றும் பல பெண்களும் உள்ளனர்.
உயிரிழந்த சிலர் அடையாளம் தெரியாமல் எரிந்து கருகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். “பேருந்திலிருந்து மூன்று பேர் மட்டுமே மீட்கப்பட்டனர். அவர்களும் தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.
இந்த பேருந்து, ஈரானில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஆப்கானியர்களை தலைநகர் காபூலுக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. தாலிபான் நிர்வாகமும் மத்திய அரசும் விசாரணை உத்தரவிட்டுள்ளன. ஐநா தரவுகளின்படி, 2025ம் ஆண்டு மட்டும் ஈரான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆப்கானியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
வறுமை, வேலைவாய்ப்பு இல்லாமை போன்ற சூழ்நிலைகளில் அவர்கள் மீண்டும் ஆப்கானிஸ்தான் மண்ணில் அடியெடுத்து வைத்துள்ள இந்த நேரத்தில், இந்த விபத்து பேரழிவாக கருதப்படுகிறது. இது சமீபத்திய காலங்களில் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும்.
