வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் மூலம் இதுவரை 92,836 பேர் பயனடைந்துள்ளதாகவும், ஒவ்வொரு சனிக்கிழமையும் இம்முகாம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறையுடன், அரசு அலுவலர்களுக்கு தொடர் விடுமுறை நாளாகவும் அமைவதால், இந்த வார சனிக்கிழமை மருத்துவ முகாம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இருப்பினும், அடுத்த வாரம் சனிக்கிழமை முதல் மீண்டும் 38 மாவட்டங்களிலும் இம்முகாம் வழக்கம்போல் நடைபெறும் என உறுதியளித்தார். மேலும், அடுத்த ஆறு மாதங்களில் 1,256 இடங்களில் இத்திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டம் மக்களுக்கு மருத்துவப் பயன்களை எளிதாக வழங்குவதற்கு முக்கிய பங்காற்றி வருவதாக அமைச்சர் சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்தார்.
