திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மாவட்ட ஆட்சியர் இன்று (ஆகஸ்ட் 9) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார். ஏற்கனவே அரசுப் பள்ளிகள் விடுமுறையில் இருந்த நிலையில், தற்போது தனியார் பள்ளிகளுக்கும் இந்த விடுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால், இன்று (09-08-2025) வட தமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை குறித்து, நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸுக்கும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸுக்கும் இடையே இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
