மும்பையின் பாண்டிரா பகுதியில் ஒரு அதிர்ச்சிகரமான பாலியல் குற்றவழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 40 வயது நபர் ஒருவர், தனது மனைவியின் தங்கையான 18 வயது நிரம்பாத சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வெளிவந்த பிறகு, குற்றத்தை மறைத்து, வீட்டிலேயே அந்த சிறுமியின் பிரசவத்தை நடத்தியதாக மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீசாரின் தகவலின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி தனது அக்காவும் மாமாவுடன்  ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். 2024 மார்ச் மாதம் முதல் 2025 ஜூலை மாதம் வரை, அந்த நபர் சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்ததாக அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இது குறித்து தனது அக்காவிடம் தெரிவித்தபோது, சிறுமியை அச்சுறுத்தி சத்தமிட வேண்டாம் என எச்சரித்ததாகவும், வெளியில் செல்லவோ மருத்துவ உதவி பெறவோ அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

குற்றத்தை மறைக்கும் முயற்சியாக, சிறுமியின் அக்கா மருத்துவமனையிலோ, பிற மருத்துவ உதவியோ இல்லாமல் வீட்டிலேயே பிரசவத்தை நடத்தியுள்ளார். ஆனால், சிறுமியின் உடல்நிலை மோசமானபோது, அவசரமாக பாபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பொலீசாருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, , அக்காவும், மாமாவும் கைது செய்யப்பட்டனர்.

சிறுமியும், அவர் பெற்ற குழந்தையும் தற்போது மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்கின்றனர். இந்த சம்பவம் மும்பை நகரத்தில் பெரும் அதிர்ச்சியையும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.