இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் மீது அமெரிக்கா 25% வரி விதிக்க முடிவு செய்திருந்தது. இது இன்று ஆகஸ்ட் 1-ம் தேதி அமலுக்கு வரவிருந்த நிலையில், அமெரிக்க சுங்கத்துறையின் செயல்முறை தேவைகளை கருத்தில் கொண்டு, அந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 7-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தால், ஆடைத் துறை, மருந்துப் பொருட்கள், கடல் உணவுப் பொருட்கள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட துறைகள் அதிகம் பாதிக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக, வாகன உதிரி பொருட்கள் ஏற்றுமதி மட்டும் தான் $2.2 பில்லியன் அளவில் அமெரிக்கா நோக்கி நடைபெறுகிறது. இது, மொத்த இந்தியா-அமெரிக்கா வர்த்தகத்தில் 10% பங்கைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு பங்குச் சந்தையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துறைகளில் பங்குகள் விலை சரிவடைந்ததுடன், முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை குறைந்து, பங்கு விற்பனை அதிகரித்துள்ளது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வராததும், வரி குறைப்புக்கான உறுதி இல்லாததும் எதிர்காலத்தில் இந்திய ஏற்றுமதித் துறைகளுக்கு மேலும் சவாலாக மாறலாம் என சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
