தர்மஸ்தலா பலர் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் அதிர்ச்சியூட்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழு (SIT) மேற்கொண்ட மூன்றாவது நாளான இன்று, நெத்ராவதி ஆற்றங்கரையிலுள்ள 4 அடி அளவிற்கு உள்ளாக தோண்டப்பட்ட ‘தள எண் 6’ பகுதியில், மனித எலும்புக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது, முன்னாள் துப்புரவு பணியாளரின் புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையின் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. அந்த பணியாளர், பெண்கள் மற்றும் சிறார்களின் உடல்களை கட்டாயமாக அடக்கம் செய்து வைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.

மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதும், போலீசார் அதனை பாதுகாப்பாக எடுத்துசென்று, முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர். அந்த இடத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தீவிரமாக நடைமுறையில் வைக்கப்பட்டிருந்தது. SIT குழுவினர், அதிகாரப்பூர்வமாக எதையும் வெளியிடவில்லை எனினும், இந்தக் கண்டுபிடிப்பு, பல ஆண்டுகளாக நிலவி வந்த வதந்திகள் மற்றும் மர்மங்களை மீண்டும் தூண்டியுள்ளது.
முன்னதாக, சாட்சியின் தகவலின் அடிப்படையில் 13 சந்தேகத்திற்குரிய அடக்க இடங்கள் அடையாளம் காணப்பட்டன. முதல் இரண்டு நாட்களில் ஐந்து இடங்களில் தோண்டப்பட்ட போதிலும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் வியாழனன்று, தள எண் 6-இல் மேம்பட்ட உபகரணங்கள் – சிறிய ஏர்த் மூவர், மற்றும் பம்புகள் கொண்டு பணி தீவிரப்படுத்தப்பட்டது. மழையால் பாதிக்கப்படாத வகையில் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தப்பட்டன.

தள எண் 6-இல் சாட்சி வழிகாட்டியபடி தோண்டிய பிறகு சில நிமிடங்களிலேயே மனித எலும்புக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டது முக்கியமான முன்னேற்றமாகும்.
எலும்புகளுடன் தொடர்புடைய பிற மாதிரிகளும் அகற்றப்பட்டு மேல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது மங்களூரு மல்லிகட்டையில் உள்ள இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் SIT அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் தொடர்ச்சியாக பல புதைந்த மர்மங்கள் வெளிவர வாய்ப்புள்ளது. SIT குழு விரைவில் இது குறித்து தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
