குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தின் நவரங்புரா பகுதியில் இயங்கி வரும் சோம் லலித் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இப்பள்ளியில் 10ஆம் வகுப்பில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவர், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றிருந்தார்.

இடைவேளையின் போது, பள்ளி கட்டிடத்தின் நான்காவது மாடியில் சாவியை சுழற்றியபடி அமைதியாக நடந்து சென்ற மாணவி, திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவத்தை பார்த்த சக மாணவிகள் அலறி ஓடி வந்தும், அவரை காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக தகவல் பெற்ற ஆசிரியர்கள், பலத்த காயங்களுடன் அந்த மாணவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவிக்கு தலை, கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பள்ளி வளாகத்திலும், மாணவிகளிடையிலும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிசிடிவி காட்சிகளில் மாணவி தற்கொலைக்கான உள்நோக்கத்துடன் நடந்து சென்றதுபோல் தெரியவில்லை என்பதால், அவர் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், மாணவி தற்கொலை செய்யும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.