பெங்காலி படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ள நடிகை சுமிர் ஹர் சவுத்ரி. இவர் நடித்த ஸ்ரீஜித் முகர்ஜியின் த்விதியா புரூஸ் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது. அதன் பின்னர் தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் உள்ள பர்த்வான்  மாவட்டத்தில் அமிலா பஜார் அருகே குழப்பமான மனநிலையுடன் ஷார்ட்ஸ் மற்றும் கருப்பு முழுக்கை சட்டை அணிந்து சாலையோரத்தில் ஒரு பேனா மற்றும் காகிதத்துடன் அமர்ந்து பெங்காலி மற்றும் ஆங்கிலம் கலந்த மொழியில் முரண்பாடாக அனைவரிடமும் பேசியுள்ளார்.

உள்ளூர்வாசிகள் ஆரம்பத்தில் சாதாரண வழிப்போக்கர் என நினைத்துள்ளனர். பின்னர் அவர் தான் ஒரு நடிகை என திரும்பத் திரும்ப அனைவரிடமும் கூறியதை அடுத்து சிலர் அவரைக் குறித்து இணையத்தில் தேடி உள்ளனர். அவரது புகைப்படங்கள், திரைப்படங்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்ததும் அவர் உண்மையிலேயே நடிகை தான் என உறுதிப்படுத்திய பின் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுமியை மீட்டு ஒரு தங்குமிடத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர் .மேலும் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அவர் ஏற்கனவே நாங்கள் கொல்கத்தாவில் இருந்தோம் எனக் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் கொல்கத்தாவில் உள்ள பெஹாலாவில் வசிப்பவர் என்றும் சிறிது காலம் போல்பூரில் வசித்து வந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகித்து வருகின்றனர்.