உத்தரபிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டம், சப்ரௌலி பகுதியில், வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட மனிஷா என்ற இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்தோண்டா கிராமத்தைச் சேர்ந்த மனிஷா, தனது மாமியார் மற்றும் கணவரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகவும், கார் மற்றும் பணத்திற்காக அடிக்கடி வற்புறுத்தப்பட்டதாகவும் தனது தற்கொலைக் குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு காஜியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த குந்தனை திருமணம் செய்திருந்த மனிஷா, திருமணத்துக்குப் பிறகு உடல் மற்றும் மன ரீதியான பல்வேறு சித்திரவதைகளை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. கர்ப்பமாக இருந்த போதும், அவளை அடித்து கருக்கலைப்புக்கு வற்புறுத்தியதுதான் மனநலம் பாதிப்பதற்குக் காரணமாகும். தொடர்ந்து அழுத்தங்கள் ஏற்பட்டதை அடுத்து, ஜூலை 2024ல் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பிய மனிஷா,  கார் மற்றும் பணம் வேண்டும் என தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்ததால், விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில், “என் மரணத்திற்கு காரணம் குந்தனும், என் மாமியாரும் மற்றும் குடும்பத்தினரே” என குற்றம் சுமத்தியுள்ளார். இவர் வீட்டில் வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது விஷம் குடித்ததைக் கண்ட அவரது தாய் சுனிதா, உடனடியாக தன் கணவனிடம் கூறினார். சுனிதாவின் தந்தை தேஜ்பீர், எம்சிடியில் பணிபுரிகிறார். சம்பவத்துக்குப் பிறகு கிராமத்துக்குத் திரும்பிய அவர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில் சப்ரௌலி காவல் நிலைய பொறுப்பாளர் தேவேஷ் சர்மா, “இதுவரை குடும்பத்தினர் எழுத்துப்பூர்வ புகார் அளிக்கவில்லை. பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. புகார் வந்ததும் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவித்தார். இந்த சம்பவம் சமூகவலைதளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு, வரதட்சணை தொடர்பான சமூக விழிப்புணர்வு மீண்டும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது. மேலும் அந்த பெண்மணி இறப்பதற்கு முன்பாக தன்னுடைய கையில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து எழுதிய நிலையில் அது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆக வருகிறது.