பீகார் மாநிலத்தின் நவாதா மாவட்டத்தில் மகாதலித் சமூகத்தைச் சேர்ந்த 20 வயது பெண் நவாதா மாவட்டத்தின் ரோஹ் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். லக்னோவில் இருந்து திங்கள்கிழமை இரவு வந்த அவர், உறவினர் வீட்டில் தங்கியபின், நேற்று முன்தினம் காலை ஒரு பேருந்தில் நவாதா வந்தார்.

அங்கிருந்து ஈ-ரிக்ஷாவில் வீட்டிற்கு செல்லும்போது, அந்த ஓட்டுநர் வழியில் தன் நண்பர்கள் 3 பேரை ஏற்றிக்கொண்டு, பெண்ணை கடத்தி சென்றார். பின்னர் ரஸூல்நகர் என்ற இடத்தில் உள்ள வெறிச்சோடிய ஒரு வீட்டுக்குள் பெண்ணை தூக்கி சென்று நான்கு பேரும் மாறிமாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இளம்பெண் அவர்களிடமிருந்து தப்பி, கோந்தாபூர் காவல் உதவி மையத்துக்கு சென்று புகார் அளித்தார். போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அவரை மருத்துவ பரிசோதனைக்குக் அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பாலியல் வன்கொடுமை நடந்ததாக உறுதி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஈ-ரிக்ஷா ஓட்டுநர் சமீர், மும்‌தாஸ் மன்சூரி, அர்மான் மற்றும் மொஹம்மது சாபிர் ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர். வழக்கை விசாரணை செய்ய சிறப்பு விசாரணை குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பையும், கோபத்தையும் உருவாக்கியுள்ளது.