மத்திய பிரதேச மாநிலம் மலன்பூர் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது, கடந்த 3 ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த பெண் ஒருவர் விஷப்பூச்சி கடித்ததால் உயிரிழந்துள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த சோனி என்ற அந்த பெண், ஆபத்தான நிலையில் முராரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.
சோனியின் உடல்நிலை மோசமாகியதை அறிந்த அவரது கூட்டாளி, வீட்டு உரிமையாளர் மற்றும் ஒரு ஆட்டோ ஓட்டுநருடன் சேர்ந்து, அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனையில் போலி பெயர் மற்றும் முகவரியில் பதிவு செய்துவிட்டு, அத்தனைபேர் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர்கள் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த விவகாரத்தில், அந்த பெண்ணை மருத்துவமனையில் விட்டுவிட்டு தப்பிய மூன்று இளைஞர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட இளைஞர் கடந்த 3 ஆண்டுகளாக சோனியுடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் அவர்களுக்கிடையில் திருமணம் நடந்ததாக எந்தவிதமான ஆவணமோ, சான்றோ இல்லை என எஸ்பி தர்மவீர் சிங் தெரிவித்துள்ளார்.
சோனி மற்றும் அந்த இளைஞர் இருவரும் மலன்பூரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவர்களது உறவுக்கான சமூக அடையாளமோ, சட்டபூர்வமான உறுதியுமின்றி ஏற்பட்ட இந்த மரணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவம், லிவ்-இன் உறவுகள் குறித்த சட்ட, பாதுகாப்பு பிரச்சனைகளையும் மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.
