
பாகிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரப்பானி கர, சமீபத்தில் அளித்த நேரலை பேட்டியில் பெரும் கலங்கத்தக்க சூழ்நிலையில் சிக்கியுள்ளார். இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட லஷ்கர்-எ-தைபா பயங்கரவாதிகளின் இறுதி ஊர்வலத்தில் முன்னிலை வகித்த ஹபீஸ் அப்துல் ரவூபை “சாதாரண பாகிஸ்தான் குடிமகன்” என அவர் விளக்கியபோது, நிருபர் நேரிலேவே ஆவண ஆதாரங்களுடன் அவரை எதிர்கொண்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்ஜஸீரா செய்தி நிறுவனம் ஒளிபரப்பிய பேட்டியில் ஹினா கூறும்போது, “இந்தியா கூறுவது போல் அவர் பயங்கரவாதி இல்லை. பாகிஸ்தானில் அப்துல் ரவூப் என்ற பெயர் பலருக்கு உள்ளது” என கூறினார். இதனையடுத்து நிருபர் உடனே எதிர்வினை அளித்தபோது, பாகிஸ்தான் ராணுவ பேச்சாளர் ஆமாத் ஷரீஃப் சவுத்ரி அவர்கள், அந்த நபர் ஒரு அரசியல் கட்சி உறுப்பினரே தவிர பயங்கரவாதி இல்லை என கூறியதுடன், அவரது தேசிய அடையாள எண் (CNIC) 35202-5400413-9 என வெளியிட்டது. இது, அமெரிக்க அரசு பயங்கரவாதி என அறிவித்த ஹபீஸ் அப்துல் ரவூபின் தகவலுடன் முழுமையாக பொருந்துவதாக நிருபர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளிக்க முற்பட்ட ஹினா ரப்பானி, “பாகிஸ்தான் ராணுவம் ஒரு பயங்கரவாதியை ஆதரிக்காது, அவர் வேறு நபர்” எனத் திருப்பிச் சொன்னபோது, நிருபருடன் மீண்டும் மோதல் ஏற்பட்டது. “நீங்களே இப்போது ISPR அந்த நபரை ஆதரித்ததாக ஒப்புக்கொள்றீங்களே” என நிருபர் குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அந்த நபரின் தேசிய அடையாள எண், பிறந்த தேதி (25 மார்ச் 1973), லாஹோர் முகவரி உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் அமெரிக்க OFAC பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ள ஹபீஸ் அப்துல் ரவூப்பின் விவரங்களுடன் துல்லியமாக பொருந்தியதாக ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரவூப் 1999-ம் ஆண்டு முதல் லஷ்கர்-எ-தைபா இயக்கத்தில் மூத்த தலைவராக செயல்பட்டு வருவதாகவும், பல்வேறு முகவரிகளில் இருந்த தடயங்களும் வெளிவந்துள்ளன.
இந்த விவகாரம், பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம், சர்வதேச அளவில் பயங்கரவாதிகளை மறைத்து, அவர்களை பொதுமக்கள் என வெளிக்காட்டும் முயற்சியில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்கு பின்வரும் பாகிஸ்தான் அரசு நடத்திய தவறான பிரச்சார முயற்சியைச் செறிந்த ஆதாரங்களுடன் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.