தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் எதிரியாக திமுகவையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் அறிவித்துள்ள நிலையில் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது ஒருபோதும் பாஜக, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார். தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டும் தான் கூட்டணி என்றும் ஒருபோதும் கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் எனவும் விஜய் தெளிவுபடுத்தினார்.

அதன்பிறகு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என நடிகர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் திமுக பாஜக ஆகிய கட்சிகளை வெளிப்படையாக நடிகர் விஜய் விமர்சிக்கும் நிலையில் அதிமுகவை மட்டும் விமர்சிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, திமுக பற்றி பேசும் விஜய் எதற்காக அதிமுகவை பற்றி பேசுவது கிடையாது.

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை எதிரிகள் பட்டியலில் அதிமுக இருக்கிறதா? இல்லையா.? அதிமுகவை பற்றி விஜய் விமர்சிப்பதும் கிடையாது கொள்கை எதிரியாக கூறவும் இல்லை. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவை எதிர்ப்பது இயல்புதான். மேலும் விஜயின் போராட்டம் பரந்தூர் மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுத்தால் கண்டிப்பாக நாங்கள் அதனை வரவேற்போம் என்று கூறினார்.