உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டம் ஃபரித்பூர் பகுதியில் உள்ள நடால்கஞ்ச் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

தனது தந்தை ஹாஜி நான்ஹே (61) மற்றும் மாற்றாந்தாய் சகோதரர் மிசார் யார் கான் (33) ஆகிய இருவரையும் காரை ஏற்றி மோதி கொன்ற மக்சூத் என்ற மகன், இந்த சதியில் தனது மனைவி நூர்பானோவுடன் இணைந்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு கரணம் நிலம் முழுவதும் கைக்கு வந்து விட வேண்டும் என்ற பேராசையால் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் கடந்த 6 மாதங்களாக திட்டமிடப்பட்டிருந்தது என்றும், செவ்வாய்க்கிழமை அன்று தந்தையும், சகோதரனும் பைக்கில் சென்றபோது, மக்சூத் காரில் பின்வந்து மோதினார்.

இருவரும் சாலையில் விழுந்த பிறகு, அவர் காரை முன்னும், பின்னுமாக இயக்கி இருவரின் மீதும் காரை ஏற்றி கொன்றுள்ளார். பின்னர் உடல்களை அருகிலுள்ள பள்ளத்தில் வீசியதும், காருடன் தப்பிச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தைப் பார்த்த வழிப்போக்கர்கள் போலீசில் தகவல் அளித்தனர்.

பேராசையே கொலையின் முக்கிய காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹாஜி நான்ஹேவிடம் 21 பிகா நிலம் இருந்தது. அதில் மக்சூத்துக்கு 5 பிகாவும், மிசாருக்கு 4 பிகாவும் கொடுத்திருந்தார். மீதமுள்ள நிலத்தை அவர் தன்னிடம் வைத்திருந்ததால் மக்சூத் கடும் கோபமடைந்துள்ளார்.

தனது மனைவி நூர்பானோவின் தூண்டுதலால், தந்தை மற்றும் சகோதரனை கொன்றதுடன், சம்பவம் நடந்த நாளில் மிசாரின் மைத்துனர் அஷ்ரப் கான் கூட இவர்களை தூண்டியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து நூர்பானோ கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் விசாரணையில் போலீசாரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் மக்சூத் தலைமறைவாக உள்ளதால், போலீசார் அவரை தேடி பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

“ஒரு பேராசை எப்படி ஒரு மனிதனை விலங்காக மாற்றுகிறது” என்பதை நினைவூட்டும் இந்த சம்பவம், அந்த கிராமம் முழுவதும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த குடும்பத்தில் ஆண் உறுப்பினர்கள் யாரும் இப்போது இல்லை; பெண்கள் மற்றும் சிறுவர்கள் மட்டுமே மீதமுள்ளதால், அவர்களின் பாதுகாப்பு குறித்து கிராம மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.