தமிழ்நாடு அரசு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்கு அரசுத் துறைகளில் மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘நான் முதல்வன்’ என்ற பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தை 2022-ம் ஆண்டு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் பல லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெற்றுவருகின்றனர்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் தேர்வாணையம் (SSC), வங்கித் தேர்வுகள் (IBPS), மற்றும் ரெயில்வே தேர்வுகள் (RRB) போன்ற ஒன்றிய அரசு தேர்வுகளுக்காக இலவச பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக தற்போது, சென்னை, மதுரை, கோவை மண்டலங்களில் பயிற்சி அளிக்கக்கூடிய தகுதியான பயிற்சி மையங்களுக்கு தமிழக அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த பயிற்சி திட்டத்தின் கீழ், சென்னை மண்டலத்தில் 300 மாணவர்களுக்கு, மற்றும் மதுரை, கோவை மண்டலங்களில் தலா 350 மாணவர்களுக்கு, தங்குமிடம், உணவு, கட்டணமின்றி பயிற்சி வழங்கப்படும். பயிற்சி பெறும் இளைஞர்கள், அரசு தேர்வுகளுக்கான முழுமையான வழிகாட்டல், மாதிரி தேர்வுகள், பாடப்புத்தகங்கள், மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல்களை இலவசமாக பெற முடியும். இதன்மூலம், ஏழை, எளியப் பின்னணியில் இருக்கும் மாணவர்கள் உயர் பதவிகளில் நுழையும் வாய்ப்புகள் பெருகும்.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் தொழில்நுட்பம், நிரலாக்கம், ஆங்கில மொழி, பிளாக்செயின், வங்கியியல், மற்றும் பொதுத் தேர்வுகள் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி பெற்று, தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ள முடிகிறது. இதுவரை, இத்திட்டத்தின் கீழ் 2.2 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பில், பயிற்சி வழங்கக்கூடிய தனியார் பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு தகுதியான பயிற்சி மையங்களைத் தேர்வு செய்து, பயிற்சி முகாம்களை விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மாணவர்களுக்கு இலவசமாக கல்வி + தங்குமிடம் + உணவு ஆகியவற்றுடன் ஒரு முழுமையான வழிகாட்டுதலாக செயல்பட உள்ளது.

இத்தகைய திட்டங்கள் தமிழக இளைஞர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை வாயிலைத் திறக்கின்றன என்றும், உயர்நிலை பதவிகளில் அவர்கள் முன்னேறும் நிலையை உருவாக்கும் வகையில் அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.