
தாய்லாந்தில் உள்ள ஒரு 8 வயது சிறுவன், தனது குடும்பத்தினரால் பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில், 6 நாய்களுடன் மட்டுமே வாழ்ந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனிதர்களுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத நிலையில் வளர்ந்த அந்த சிறுவன், தற்போது மனித மொழியை பேச முடியாமல், நாய் போல் அலறுவதில் மட்டுமே தொடர்பு கொள்ளக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த விபரீதமான நிலையை, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் குழந்தைகள் நல ஆர்வலரான பவீனா ஹொங்க்சகுல் ஆகியோர் கவனித்தனர். அதன் பின்னர், பவீனா ஹொங்க்சகுல் அமைப்பும், உள்ளூராட்சி போலீசாரும் சேர்ந்து சிறுவனை வீட்டில் இருந்து மீட்டனர்.
அவருக்கு கடந்த 2 வருடமாக பள்ளிக்கூடம் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும், ஆனால் அவருடைய தாய் அரசு தரும் உதவித் தொகையான 400 பாட் (தாய்லாந்து நாணயத்தில்) பெறுவதோடு, அந்த தொகையை தனக்கே வைத்துக்கொண்டு சிறுவனை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பவீனா கூறியதாவது: “அவனோடு பேச முயற்சிக்கும்போது அவன் எந்த வார்த்தையையும் சொல்லவில்லை. அவன் நாய் போல் அலறினான். அவன் நிலைமையைப் பார்க்கவே அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது,” என அவர் உணர்வுடன் கூறினார்.
மேலும் சிறுவனின் தாய் மற்றும் சகோதரர் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக மருந்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவர்களைப் போலீசார் கைது செய்து சிகிச்சைக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும், அந்த சிறுவனை அண்டை வீட்டார் தனது குழந்தைகளுடன் கூட விளையாடவிடவில்லை, ஏனெனில் அந்தக் குடும்பத்தின் நடத்தை விசித்திரமாகவும், அச்சத்தை ஏற்படுத்துவதுபோலவும் இருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
மனிதர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில், அந்த சிறுவன் நாய்கள் மட்டுமே இணையாக இருந்ததால், அவன் அந்த நாய்களுடன் நட்பாகி, அவர்களது நடத்தையை பின்பற்றி, அலறுவது, உமிழ்வது போன்ற நடத்தைகளை தன்னுடைய தொடர்பு வடிவமாகக் கொண்டு வளர்ந்திருக்கிறார்.
தற்போது, சிறுவன் தாய்லாந்தின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் சிறுவர் நல முகாமில் பாதுகாப்பாக வைத்துள்ளார். பவீனா ஹொங்க்சகுல் அறக்கட்டளையும், அதிகாரிகளும் இணைந்து, அந்த சிறுவனுக்கு உரிய கல்வி மற்றும் நீண்ட கால நலப்புரிகை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது போன்ற சிதைந்த குடும்ப சூழ்நிலைகள், ஒரு குழந்தையின் வாழ்வையே மாற்றக் கூடிய வலியை ஏற்படுத்தும் என்பதற்கான கடும் நினைவூட்டலாக இந்த சம்பவம் அமைகிறது.