
சென்னை வடபழனி ஆலப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பழம்பெரும் திரைப்பட துணை நடிகர் செல்லப்பா (வயது 63), தற்போது வாய் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் மிகவும் துயரமாக உள்ளார். இவரது வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருவது சமூக வலைதளங்களில் பலரது இதயத்தைக் கணிய வைத்திருக்கிறது.
வீடியோவில் செல்லப்பா கூறுகையில், “நான் கடந்த 50 ஆண்டுகளாக திரைப்படத் துறையில் பணியாற்றி வருகிறேன். நடிகராகவும், ‘ஆர் டைரக்டராகவும்’ வெறும் வேலை பார்க்கவில்லை. ஏராளமான புதுமுக நடிகர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நான் உதவியிருக்கிறேன். இன்று நான் சிகிச்சைக்காக பொது மருத்துவமனையில் அனாதையாக இருக்கிறேன்,” என வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
வாயில் ஏற்பட்ட புற்றுநோயால் கடந்த மூன்றாண்டுகளாக மருத்துவமனைகளையே வீடாகக் கொண்டு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் செல்லப்பா, “எங்க வீடு எங்க இருக்குன்னே எனக்கு தெரியாது. மருத்துவமனையில் ஒரு ஸ்கேன் எடுக்கணும் என்றால் கூட பணம் தேவைப்படுகிறது. என்னிடம் பணமே இல்ல. இன்று நான் சாலைமீதான ஆதரவற்றவனாக மாறி விட்டேன்,” என கண்ணீர் விட்டும் பகிர்ந்துள்ளார்.
செல்லப்பா மேலும் தெரிவித்ததாவது, “நான் பல பேட்டிகள் கொடுத்தேன். ஆனாலும் எனக்கு எந்த உதவியும் வரவில்லை. என் கஷ்டத்தைப் புரிந்து எவராவது உதவினால் பெரிய உதவியாக இருக்கும். எனது தொடர்பு எண் வழியாக என்னைத் தொடர்பு கொண்டு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என அழுதபடியே கேட்டுக்கொண்டார்.
இந்த சோகமான சம்பவம், திரைத்துறையில் பல ஆண்டுகள் சேவை செய்த படைப்பாளிகளும், துணை நடிகர்களும் எவ்வாறு மறக்கப்பட்டு விட்டார்கள் என்பதை வெளிக்கொணர்கிறது. அவருக்கான மருத்துவ உதவிக்காக சமூக ஊடகங்களிலும் திரையுலகத்திலும் விரைந்து ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.