
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள கோவில் ஊழியரான சத்தீஸ்வரனுக்கு, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவு இன்று வெளியாகியுள்ளது.
அதாவது, காவல்துறையினரால் அஜித் குமார் என்பவர் தாக்கப்பட்ட சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்த முக்கிய சாட்சியாளராக சக்தீஸ்வரன் இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வழக்கின் முக்கியமான ஆதாரமாக கருதப்படுகிறது. அதனை எடுத்ததற்குப் பிறகு, தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருவதாகவும், தனக்கு பாதுகாப்பு தேவைப்படுவதாகவும், தமிழக டிஜிபிக்கு நேரடியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் அவர் மனு அளித்திருந்தார்.
மேலும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் பேசிய சத்தீஸ்வரன், “நான் மட்டுமல்ல, எனது நிலைப்பாட்டைப் போலவே, இந்த வழக்கில் சாட்சியாக இருப்போர் அனைவருக்கும் கொலை மிரட்டல் உள்ளது. எனவே, அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார். இது பொதுமக்களிடையே பெரும் கவலையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
அதனடிப்படையில் தற்போது அவரது கோரிக்கையை ஏற்று, 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இது வழக்கின் விசாரணைக்கு தேவையான முக்கிய சாட்சிகளை பாதுகாப்பதற்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. தற்போது அந்த வீடியோவை அடிப்படையாக வைத்து அஜித் குமாரின் மரணம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.