திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஜிம் பயிற்சியாளர், இந்தியா முழுவதும் ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றவர். ஒரு காலத்தில் ‘மிஸ்டர் இந்தியா’ எனும் பட்டத்தையும் வென்று பெருமை சேர்த்திருந்த மணிகண்டன், மீஞ்சூர் பகுதியில் ஜிம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ நாளில் ஒரு பிரியாணி கடை திறப்பு விழாவில் பங்கேற்ற மணிகண்டன், பின்னர் நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அதிகாலை வயிற்று வலியால் அவதிப்பட்டு, வாந்தி எடுத்த நிலையில், மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழந்தார்.

இந்த மரணம் தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மணிகண்டனின் தாயார் கூறுகையில், “சில வருடங்களுக்கு முன்பு ஆணழகன் போட்டிக்காக தயாராகும்போது, நண்பர்கள் ஊக்கமருந்து (ஸ்டிராய்டு) ஊசி போடச் சொல்லி, அளவுக்கு அதிகமாக செலுத்தினர். அதனால் மேடையிலேயே மயங்கி விழுந்தார். பின்னர் உடல்நிலை சீராக வந்தாலும், மீண்டும் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போனது. அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது. முன்னதாக என் மூத்த மகனும் இறந்தார், இப்போது இரண்டாவது மகனும் பறிகொடுத்துவிட்டேன்” என, வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

மருத்துவ வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, சில உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் உடலை முறுக்கேறியவாறு காட்டும் நோக்கத்தில் ஸ்டிராய்டு மருந்துகளை ஊசி மூலம் செலுத்திக் கொள்கிறார்கள். இதனால் சிறுநீரக பாதிப்பு, இரத்த அழுத்தம், நீண்டகால உடல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இத்தகைய மருந்துகளைப் பயன்படுத்தும் அனைவரும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளைக் மேற்கொள்வது அவசியம் என வலியுறுத்துகின்றனர்.

மேலும் மணிகண்டன் போல உடற்கட்டமைப்பில் சாதனை படைத்தவர் இளமையில் உயிரிழப்பது, உடற்பயிற்சி உலகத்தில் பெரும் அதிர்ச்சியாகவும், எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், அவர் மரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.