சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காவலாளி அஜித்குமார் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ள  நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனிப்படை காவலர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை சஸ்பெண்ட் செய்து கைது செய்துள்ள நிலையில் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது வழக்கின் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மடப்புரம் கோவிலில் வைத்து தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை அடித்ததை சக்தீஸ்வரன் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அதனை ஒப்படைத்ததோடு கழிவறையில் இருந்து அந்த வீடியோவை சில நிமிடங்கள் மட்டுமே எடுத்ததாகவும் ஒருவேளை மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜா கடந்த 28ஆம் தேதி தன்னை மிரட்டியதாகவும் தனக்கும் தன்னுடைய சகோதரர் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் தற்போது பாதுகாப்பு வேண்டும் என கூறி டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.