ஜிம்மில் ஒரு இளைஞர் உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பால் உயிரிழந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது. ராஜா நஹர் சிங் காலனி, தெரு எண் 6 இல் வசிக்கும் 37 வயதான பங்கஜ் சர்மா என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தனது நண்பர் ரோஹித்துடன் ஜிம்மிற்கு வந்துள்ளார்.

அவர்  புல்-அப் பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார். மூன்றாவது முறையாக முயற்சி செய்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக CPR கொடுக்கப்பட்டும், உயிரை காக்க முடியவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பங்கஜ் கடந்த நான்கு மாதங்களாக தனது எடையை குறைக்க ஜிம்மிற்குச் சென்று வந்துள்ளார். அவர் சுமார் 170 கிலோ எடையுடன் இருந்ததோடு, எந்தவிதமான ஸ்டீராய்டுகளையோ புரதப் பொடியையோ பயன்படுத்தவில்லை என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

சம்பவம் நிகழ்ந்ததும் ஜிம்மில் இருந்தவர்கள் மற்றும் நண்பர்கள் இரண்டு முறை CPR வழங்கியுள்ளதோடு, அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்தும் டாக்டர் குழு அழைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், உயிரை காப்பாற்ற முடியவில்லை. சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பவ விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே பல இடங்களில் நடந்துள்ளன. இந்த நிலையில், உடற்பயிற்சி மேற்கொள்ளும் அனைவரும் தங்கள் உடல்நிலை மற்றும் திறனை மதித்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

துணை சிஎம்ஓ டாக்டர் எம்.பி. சிங் கூறுகையில், ஒருவருக்கு ஹார்மோன்கள், இதயத்துடிப்பு, உயர் இரத்த அழுத்தம், சுவாச பிரச்சனை போன்றவை இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.