
டெல்லி அருகேயுள்ள நொய்டா பகுதியில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர், தனது மனைவியை பாகிஸ்தான் உளவாளி என சந்தேகித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மனைவி, சீனாவில் எம்பிபிஎஸ் படிக்கும் காலத்தில் பாகிஸ்தான் இளைஞரை திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் இந்தியா திரும்பி தன்னை திருமணம் செய்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தொழிலதிபர் லோகேஷ் ரதி கூறியதாவது: கடந்த 2004ஆம் ஆண்டு, அவரது மனைவி சீனாவில் மருத்துவ படிப்பிற்காக சென்ற போது, அங்கு வசித்து வந்த பாகிஸ்தான் நபரான அதிகையுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதற்கு ஒரு வருடத்தில் அவர்களுக்கு மகனும் பிறந்திருக்கிறார். தொடர்ந்து பலமுறை பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு மட்டும், அவர் பாகிஸ்தானில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்கியதுடன், ஒருவாரம் கழித்து மீண்டும் பாகிஸ்தானுக்கு சென்று 5 நாட்கள் தங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு மதுராவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த லோகேஷ், டிசம்பரில் திருமணம் முடிந்த பிறகு, மூன்று மாதங்களிலேயே தனது மனைவி ஹோலிக்காக தாய்வீட்டுச் சென்றுவிட்டு திரும்பவில்லை என கூறுகிறார். காணாமல் போனதைத் தொடர்ந்து, நொய்டா மற்றும் டெல்லி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், மனைவியின் கடந்த கால நடவடிக்கைகள் குறித்து தெரிய வந்ததும், பாகிஸ்தானுடனான தொடர்புகள் குறித்த தகவல்களைச் சேகரிக்க முயன்றுள்ளதாகவும், இதனால் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில், தொழிலதிபரின் மனைவியும், தனது கணவர் மீது குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை புகார்களை டெல்லி துவாரகா காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், லோகேஷ் உயர் நீதிமன்றத்தில் அதை எதிர்த்துப் போராடி வருகிறார். மனைவி விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது மனைவியின் பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டு பயண விவரங்களைச் சரிபார்க்க வேண்டும் என அவர் காவல்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் உண்மையா? அல்லது குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட முரண்பாடா? என்பது விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என கூறப்படுகிறது.