உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் அதிர்ச்சி மற்றும் வேதனையை ஏற்படுத்திய கொலைவழக்கு ஒன்று நேற்று முன்தினம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  அதாவது மதுரா கோசிகலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐன்ச் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்த் என்ற 28 வயது இளைஞர், கடந்த வாரம் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் பல மணி நேரம் ஆகியும் கோவிந்த் வீடு திரும்பாததை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தேடத் தொடங்கினர். இந்நிலையில், அவரது உடல் கிராமத்தில் உள்ள ஒரு பழைய செங்கல் சூளைக்கு பின்புறம் உடல் சற்று சிதைந்த நிலைமையில், இரத்தத்தில் முழுமையாக நனைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. உடனே இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், கோவிந்த் கூர்மையான ஆயுதத்தால் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. அவரது கழுத்தில் ஆழமான வெட்டு காயங்கள் இருந்துள்ளன. இதில் சந்தேகத்தின் பேரில், போலீசார் அவரது மனைவி கவிதாவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, கவிதாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளைஞருக்கும் கள்ள உறவு இருப்பது தெரியவந்தது. இந்த உறவை கணவர் எதிர்த்ததன் காரணமாகவே, காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முந்தையதாக மீரட் மற்றும் இந்தூரில் நடந்த சோனம் ரகுவன்ஷி, முஸ்கான் போன்ற பிரபலக் கொலை வழக்குகளிலும் மனைவிகள் தங்கள் கணவர்களை கள்ளக்காதலுக்காகவே கொலை செய்திருப்பது போல, இச்சம்பவமும் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது காவல்துறை காவிதா மற்றும் அவரது காதலனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.