
சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அஜித் குமார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திப்புவனம் காவல் டிஎஸ்பி சண்முகசுந்தரத்தின் கீழ் செயல்பட்டு வந்த தனிப்படை காவல்துறையினரை அஜித் குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தான் காவல்துறையினர் அஜித் குமாரை அடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மண்டல ஐஜிகள், போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்டோருக்கு கீழ் செயல்படும் தனிப்படை இனி நிரந்தரமாக செயல்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் முக்கியமான குற்ற வழக்குகளில் விசாரணை நடத்துவதற்காக மட்டுமே துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் டிஎஸ்பிகள் ஆகியோர் தங்களுக்கு கீழ் தனி படைகளை அமைத்துக் கொள்ளலாம். அவ்வாறு தனிப்படை அமைப்பதற்கும் முன் மண்டல ஐஜிகள் மற்றும் போலீஸ் கமிஷனர்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனிப்படை காவல்துறையினருக்கு உடனடியாக மாற்றுப் பணிகள் வழங்க வேண்டும். மேலும் அவர்களை சட்ட ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை தமிழக அரசின் முழு ஆலோசனையின் படி வெளியிட்டுள்ளதாக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம் தனிப்படை போலீசார் விசாரணை எனக் கூறி எல்லை மீறி நடந்து கொள்வதை தடுக்கலாம் என டிஜிபி சங்கர் ஜீவால் கூறியுள்ளார்.