
உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று 2020 ஆம் ஆண்டு உச்சம் தொட்டது. இதனால் ஊரடங்கு ஏற்பட்டு உலகமே முடங்கிய நிலையில் பின்னர் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு மீண்டும் இயல்புநிலை திரும்பியது. இந்நிலையில் சமீபகாலமாக நாட்டில் இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என்ற ஒரு செய்தி பரவி வருகிறது.
முதல்வர் சித்தர் ராமையா கூட கொரோனா தடுப்பூசி திடீர் மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறிய நிலையில் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியது. இந்நிலையில் தற்போது மத்திய அரசாங்கம் இந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது புதிய ஆய்வுகள் மற்றும் மருத்துவ தரவுகளின் அடிப்படையில், கோவிட்-19 தடுப்பூசிகளும் திடீர் இதய இறப்புகளும் எந்தவித தொடர்பும் இல்லை என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ICMR (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) மற்றும் AIIMS (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) ஆகியவை நடத்திய விரிவான ஆய்வுகளின் முடிவுகளை மேற்கோள் காட்டி, இந்த அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கோவிட்-19க்கு பிறகு, குறிப்பாக இளைஞர்களும், நடுத்தர வயதினரும் திடீரென உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவலாக கூறப்பட்டு வந்தது. இதனால், தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் எழுந்தன. ஆனால், ICMR மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) ஆகியவை மேற்கொண்ட ஆய்வுகள் மூலம், இந்தியாவில் வழங்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்றும், எந்தவித கடுமையான பக்க விளைவுகளும் மிக மிக அரிதாகத்தான் ஏற்படுகின்றன என்றும் தெரியவந்துள்ளது.
திடீர் இதய இறப்புகள் ஏற்பட பல்வேறு காரணிகள் உள்ளன என்பதை அறிக்கை தெளிவாக வலியுறுத்துகிறது. அதில், மரபியல், உடல் பழக்கவழக்கங்கள், பழைய நோய்கள், மற்றும் கோவிட்-க்குப் பிந்தைய உடல் நிலை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், கோவிட் தடுப்பூசியைத் தொடர்புபடுத்தி மரணங்களை விளக்குவது அறிவியல் ஆதாரமற்றதும் தவறானதும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் இதுபோன்ற தவறான தகவல்கள் சமூகத்தில் தவறான அச்சத்தை ஏற்படுத்தும் என்பதால், அரசுத் தரப்பில் இருந்து மக்கள் தாராளமாக தடுப்பூசி எடுக்கலாம் எனவும், அவை பாதுகாப்பானவை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறான தகவல்களையும், பீதியையும் தவிர்க்க வேண்டும் என்பது அமைச்சகத்தின் வலியுறுத்தலாகும்.