மும்பை மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் பயணித்த போது, 2 வயது குழந்தை ரயிலிலிருந்து தனியாக வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் ரயிலுக்குள் இருந்தபோது, குழந்தை மேடையில் தனியாக நின்றது. இது வெறும் சில விநாடிகளில் உயிரிழப்பாக மாறும் நிலையில், மெட்ரோ ஊழியர்களின் சீரான கவனமும், விரைந்து எடுத்த நடவடிக்கையால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் மெட்ரோ ரயில் ஒரு நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது நடந்தது. கதவுகள் மூடப்படுவதற்கு முன், அந்த 2 வயது குழந்தை ரயிலிலிருந்து இறங்கி, மேடையில் நின்றுவிட்டது. பெற்றோர் தங்களுக்கே தெரியாமல் குழந்தையை விட்டு விட்டனர். ஆனால் அருகில் இருந்த மெட்ரோ ஊழியர்கள் குழந்தை தனியாக இருப்பதை கவனித்து உடனடியாக ரயில் ஓட்டுநருக்கு தகவல் அனுப்பினர். ஓட்டுநர் ரயிலை உடனே நிறுத்தினார். அதன் பிறகு, ஊழியர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்டனர்.

சில வினாடிகளில் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டன. பெற்றோர் பதற்றத்துடன் உள்ளே சென்று தங்கள் குழந்தையை மீண்டும் ரயிலுக்குள் அழைத்தனர். இந்த சம்பவம் மெட்ரோவில் உள்ள சிசிடிவி கேமராக்களில் தெளிவாக பதிவாகியிருந்தது. அது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் மெட்ரோ ஊழியர்களின் செயல்முறையையும் அவர்களது தைரியத்தையும் பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவை மும்பை மெட்ரோ நிர்வாகமான மகா மும்பை மெட்ரோ ஒப்பரேட்டிங் கார்ப்பரேஷன் லிமிட்டெட் (MMMOCL) தங்களின் அதிகாரப்பூர்வ @MMMOCL_Official கணக்கில் வெளியிட்டுள்ளனர். இது 45,000-க்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் ஊழியர்களின் விழிப்புணர்வை வியந்து பாராட்டுகின்றனர். “இது நிஜமாகவே ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய செயல்தான்,” என ஒருவர் பதிவிட்டிருந்தார்.

மும்பை மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்து பயணிகளிடம் சிறுவர்களைப் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றும், அலட்சியமாக இருப்பது அவசர சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கையுடன் கூறியுள்ளது. இந்த சம்பவம், பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவூட்டுகிறது.