
சீனாவில் உள்ள ஃபுஜியன் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான வூ என்ற பெண், பல் மருத்துவரிடம் செல்லும் செலவுகளை தவிர்க்கும் நோக்கில், வீட்டிலேயே தனது பற்களுக்கு ரிடெய்னர் (Retainer) உருவாக்க முயன்றார்.
அதற்காக ஆன்லைனில் இருந்து ₹350 மதிப்புள்ள ஒரு பல் இம்ப்ரெஷன் கிட்டை வாங்கிய அவர், அந்தக் கருவியில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை. அதுவே பின்னர் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது.
அதாவது வூ ஆல்ஜினேட்டைப் பயன்படுத்தாமல், நேரடியாக தனது வாய்க்குள் பிளாஸ்டரை ஊற்றினார். உடனே பிளாஸ்டர் வாயில் உறைந்து கடினமாகி விட்டது. இதனால், பற்கள் அனைத்தும் பிளாஸ்டருடன் ஒட்டிக் கிடந்தன.
வலியால் துடித்த வூ, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர் மற்றும் செவிலியர் ஒன்றாக சுமார் 1 மணி நேரம் போராடி பற்களில் உள்ள பிளாஸ்டரை மெதுவாக அகற்றினர்.
இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்ததாவது, இப்படியான தொழில்முறை செயல்களை வீட்டிலேயே செய்வது மிகவும் ஆபத்தானது. ஆன்லைனில் மலிவான தயாரிப்புகளைப் பார்த்து, மக்கள் தாங்களே மருத்துவப் பணிகளைச் செய்வதால், அவர்கள் ஆரோக்கியம் பெரும் ஆபத்தில் சிக்குகிறது. நல்லவேளை வூவின் பற்கள் சேதமடையாமல் இருந்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று கூறினார்.
ஒரு ரிடெய்னரை மருத்துவமனையில் உருவாக்கும் செலவு சுமார் ₹8,000 இருக்கும் நிலையில், வூ ஆன்லைனில் ₹2,000க்குள் அதையே செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் இந்த அனுபவம், உடல்நலம் என்பது பணத்தைவிட மேலானது என்பதை வலியுறுத்துகிறது. மேலும் சமூக ஊடகங்களிலும் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் பரவி வருகின்றன.