
ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில், சிலிகோசிஸ் நோயாளிகள் என்ற பெயரில் ரூ.3.17 கோடி மதிப்புள்ள நிதி மோசடி நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலிகோசிஸ் (Silicosis) என்பது ஒரு கடுமையான சுவாச நோய் ஆகும்.
கற்கள் தகர்க்கப்படும் வேலை, கட்டடக் கழிவுகள் தூசியாக்கும் தொழில்கள், கல் வெட்டும் தொழில்கள், சிமெண்ட் மற்றும் கல்லணை தொழில்களில் வேலைசெய்யும் மக்கள் அதிகமாக சிலிகோசிஸால் பாதிக்கப்படுவார்கள்.
அரசு நலத்திட்டத்தின் கீழ் சிலிகோசிஸ் பாதிப்புக்காக நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில், இதில் 109 பேர் என பதிவு செய்யப்பட்டதில், அவர்களில் 106 பேர் போலி நோயாளிகள் என விசாரணையில் தெரியவந்தது. இதில், மருத்துவர்கள், ரேடியோகிராஃபர்கள் மற்றும் பிற ஊழியர்களும் சேர்ந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது.
சில நோயாளிகள் மாவட்ட அரசு மருத்துவமனையில் பதிவு செய்யவில்லை. ஆனால், வேறு இடங்களில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படங்கள், போலியான OPD எண்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு, சிலிகோசிஸ் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த சான்றிதழ்களை அடிப்படையாக வைத்து அரசிடமிருந்து நிதியுதவி பெறப்பட்டிருக்கிறது. இது குறித்து மாவட்ட தலைமை மருத்துவர் டாக்டர் தரம் சிங் மீனா, கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிலிகோசிஸ் நோயாளிகளுக்கு மாதம் ₹1500 ஓய்வூதியம், ₹3 லட்சம் வரை நிதியுதவி, இறப்புக்குப் பிறகு குடும்பத்திற்கும் ₹2 லட்சம் நிதி வழங்கப்படும் திட்டம் செயல்படுகிறது.
இதையே தவறாக பயன்படுத்தி போலி சான்றிதழ்கள் மூலம் அரசு நிதி வாங்கப்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. தற்போது, மருத்துவத் துறை மற்றும் போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். “மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.