பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள தர்ஹாரா காவல் நிலையத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான காட்சி, தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது. அதாவது மதுபான கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவனை சந்திக்க, அவரது மனைவி வத் சாவித்திரி விரத நாளில் காவல் நிலையம் வரை சென்றார். அங்கு, திலகம் இட்டு, பாதுகாப்பு நூல் கட்டி, அவரது பாதங்களைத் தொட்டு ஆசிபெற்ற இந்தச் சம்பவம், சுற்றியுள்ளவர்களையும் உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது.

விக்கி யாதவ் என்பவர் மதுபானக் கடத்தல் வழக்கில் சிக்கி, போலீசாரால் கைது செய்யப்பட்டார். 150 லிட்டர் நாட்டு மஹுவா மதுபானம் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அவருடன் சேர்ந்து சுமித் யாதவ் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டிய நிலையில், விக்கியின் மனைவி காவல் நிலையத்துக்குச் சென்று, வத் சாவித்திரி விரத வழிபாட்டை செய்ய அனுமதி கேட்டார். அவரது உண்மையான பக்தியையும், நம்பிக்கையையும் மதித்த காவல் நிலைய பொறுப்பாளர், மனிதாபிமான அடிப்படையில் சிறிது நேரம் வாய்ப்பு வழங்கினார்.

அந்தப் பெண், தனது கணவனை உணர்வுடன் வரவேற்று, திலகம் இட்டு, பாதுகாப்பு நூல் கட்டினார். பின்னர், அவரது கால்களைத் தொட்டு ஆசிபெற்றார். இந்தக் காட்சியைக் கண்டு காவல் நிலையத்தில் இருந்தவர்களும் மௌனமாக நின்றனர். கணவரான விக்கி யாதவ், தனது மனைவியின் அன்பையும், நம்பிக்கையையும் கண்டு உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.