ராஜஸ்தான் மாநிலம் ராய்ப்பூர் காவல் நிலைய எல்லை பகுதிக்கு உட்பட்ட குடியா கிராமத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான தேஜ்பால் சிங் உதாவத், தனது ஜேசிபி டிரைவரை டீசல் திருடியதாக சந்தேகித்து, தலைகீழாக ஜே.சி.பி இயந்திரத்தில் கட்டி வைத்து பெல்ட்டால்  அடித்து சித்திரவதை செய்துள்ளார்.

இந்த சம்பவம் சுமார் 3 மாதங்களுக்கு முன் நடந்ததாகவும், அதற்கான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், டிரைவர் 3 மணி நேரம் பலவிதமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு, காயங்களில் உப்பை தேய்க்கப்பட்டு கொடூரமாக துன்புறுத்தப்படுவதை காண முடிகிறது.

இந்த சம்பவம் தேஜ்பாலின் பண்ணை வீட்டில் நடந்தது. அப்போது பலரும் அங்கு இருந்தும், தேஜ்பாலின் பயத்தால் யாரும் அந்த டிரைவரை காப்பாற்ற முன்வரவில்லை. தேஜ்பால் மீது ஏற்கனவே ராய்ப்பூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

அவர் சட்டவிரோத மணல் திருடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வீடியோ வெளிவந்ததும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேஜ்பாலை கைது செய்துள்ளனர்.