இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி ஜூன் 20-ம் தேதி தொடங்கும் நிலையில் சமீபத்தில் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் 18 இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்த  நிலையில் பும்ரா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அது நடக்காததால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரது மத்தியிலும் இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் பும்ராவால் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாட முடியாது என்பதால் அவரை கேப்டனாக நியமிக்கவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார். அதே நேரத்தில் தற்போது ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயஸ் ஐயரை டெஸ்ட் கிரிக்கெட் அணியில் எடுக்காததும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது வெளிப்படையாகவே இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் இதைப் பற்றி பேசியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது, ஸ்ரேயஸ் ஐயர் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார். அவர் நல்ல பார்மில் இருக்கும் நிலையில் அவரது கேப்டன்சிக்கு உரிய பாராட்டுகள் கிடைப்பதில்லை. ஐபிஎல் தொடரில் தடுமாறியதால் தான் ரிஷப் பண்டுக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை என மனோஜ் திவாரி கூறியிருந்தார். அப்படி பார்த்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் மிகச் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு மிகச் சிறப்பாக அமைந்துள்ள நிலையில் அவர் அற்புதமானும் கேப்டனும் கூட.

ஒருவர் நல்ல பார்மில் இருக்கும்போது அவரை கண்டிப்பாக வெளிநாட்டு தொடருக்கு எடுத்துச் செல்வது அவசியம். ஸ்ரேயஸ் ஐயர் போன்று 2-3 வீரர்கள் அணியில் இருந்தால் கண்டிப்பாக அது எதிரணிக்கு பயத்தை ஏற்படுத்தும். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் அவரால் ஏன் டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது. ஸ்ரேயஸ் ஐயர் 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தகுதியானவர். அவரை நான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பார்க்க விரும்புகிறேன் என்று கூறினார்.

மேலும் முன்னதாக தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஸ்ரேயஸ் ஐயர் நடப்பு ஐபிஎல் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி அதிக ரன்களை குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனாலும் தற்போதைய சூழலில் அவரை டெஸ்ட் கிரிக்கெட் அணியில் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். கடந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்ல ஸ்ரேயஸ் ஐயர் முக்கிய பங்கு வகித்தோடு அந்த போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்று அந்த மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.