
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹ்ண்ட்வா மாவட்டத்தில் ஒரு 45 வயது பழங்குடியின பெண் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பழங்குடியின பெண்ணை 2 பேர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் ஒரு இரும்பு கம்பியை நுழைத்தனர். இதில் அந்த பெண்ணின் கர்ப்பப்பை வெளியே வந்துவிட்டது.
உறவினர்கள் அந்த பெண்ணை காணவில்லை என தேடிய போது அவரது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு புதரில் ரத்த கசிவோடு உயிருக்கு போராடியபடி அந்த பெண் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற போதிலும் அந்த பெண் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து ஹரிபல்வி மற்றும் சுனில் துர்வே ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்ததோடு 20,000 பணத்தையும் கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர். தற்போது அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் உடலின் முக்கிய உறுப்புகள் கிழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் தற்போது மாநில தலைவர் ஜிதுபடேல் தலைமையில் மூன்று பெண் உறுப்பினர்களை கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது. மேலும் இந்த சம்பவம் டெல்லியில் நடைபெற்ற நிர்பையா கொலை சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்துவது போல் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.