பெங்களூருவில் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்களின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் ‘@metro_chicks’ என்ற கணக்கில் பதிவிட்டு வந்த 27 வயதான திகந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவின் ஹாசனைச் சேர்ந்த இவர், பெங்களூருவில் திகலரபால்யா பகுதியில் வசித்து வந்தார். முருகேஷ்பால்யா பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்குப்பிரிவில் பணியாற்றி வந்த இவர், வேலைக்கு சென்று வரும்போது மெட்ரோவில் பெண்களை புகைப்படம் எடுத்து அந்தக் கணக்கில் பதிவிட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த ‘@metro_chicks’ கணக்கில் 5,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருந்தனர். இதில், மெட்ரோ ரயில்களுக்குள்ளும், நடைமேடைகளிலும் பெண்கள் எடுக்கப்பட்ட ஏராளமான புகைப்படங்கள் இருந்தன. சித்தரிக்கப்பட்ட பெண்களில் யாரும் தங்களது புகைப்படம் எடுக்கப்படுவதைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

ஒரு சமூக வலைதள பயனர் இந்த சுயவிவரத்தை கண்டறிந்து போலீசாரிடம் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து திகந்தை கைது செய்தனர். தொடர்ந்து, FIR பதிவு செய்யப்பட்டு, அந்த இன்ஸ்டா கணக்கில் உள்ள அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டன.

திகந்த் தனியாகவே இச் செயல்களில் ஈடுபட்டாரா அல்லது பின்னணியில் மேலும் சிலர் உள்ளார்களா என்பதைக் கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் இந்த காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றுவதற்கு எந்த தளங்களை பயன்படுத்தினார்? இதனால் அவருக்கு  நிதி  கிடைத்ததா? போன்ற அம்சங்களும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.

பெண்களின் தனிமைப் பாதுகாப்பை மீறிய இந்த சம்பவம், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தும் ஆபத்துகளை மீண்டும் ஒருமுறை வெளிக்கொண்டு வந்துள்ளது.