
அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஊடக பயனர் ஒருவர், மெடலின் (Medellín), கொலம்பியாவிற்கான விமானம் மற்றும் ஹோட்டல் பேக்கேஜை எக்ஸ்பீடியா வழியாக முன்பதிவு செய்திருந்தார். ஆனால், மருத்துவ காரணங்களால் அந்த பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் அவரிடம் பயணக் காப்பீடு இல்லாததால், விமான நிறுவனமும், ஹோட்டலும் பணத்தை திருப்பித் தர மறுத்தன. இதற்காக அவர் பயண செலவாக $2,500 இழப்பது உறுதி எனத் எண்ணினார். ஆனால் தக்க சமயத்தில் ChatGPT-4o-வை அணுகினார்.
அதன் பின் ChatGPT உதவியுடன், அவர் தனது நிலையை “பொதுவான கவலைக் கோளாறு (GAD)” என விளக்கி, மருத்துவரின் குறிப்புடன் கூடிய ஒரு மின்னஞ்சலை தயாரித்தார். அதனை ஹோட்டல் தொடக்கத்தில் மறுத்தாலும், AI உருவாக்கிய கடிதத்தின் பின்னர் பணத்தைத் திருப்பித் தர ஒப்புக்கொண்டது.
மேலும் விமான நிறுவனம் கடுமையான கொள்கைகளை மேற்கோள் காட்டியபோதும், மேலும் ஒரு நுட்பமான கடிதத்தை ChatGPT மூலம் எழுதிய பின், அவர்களுக்கு அனுப்பியதும், பணத்தை திருப்பி அனுப்பும் முடிவை எடுத்ததாக கூறினார்.
அந்த பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. “AI ஒரு தனிப்பட்ட சட்ட ஆலோசகராக செயல்படுகிறது” என சிலர் பாராட்டியிருக்க, மற்றவர்கள் “இதற்கான நேர்மையான ஆதாரங்களை, ஸ்கிரீன்ஷாட்கள் உள்ளிட்ட ஆதாரங்களை பகிர வேண்டும்” என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும், AI யை தங்கள் நலனுக்காகப் பயன்படுத்துவது நெறிமுறைகளுக்கு எதிரானது என சிலர் விமர்சித்துள்ளனர். இருப்பினும், “AI கருவிகள் தங்கள் உரிமையைப் பாதுகாப்பதில் பலருக்கு துணை நிற்கும்” என்பதற்கான ஒரு முக்கியமான உதாரணமாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.