ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் 25 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ராஜஸ்தானில் அனுராதா ஹேக் என்கின்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் தன்னை ஒரு மணப்பெண்ணாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் அவரை தொடர்பு கொள்ளும் ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.

அதாவது திருமணம் செய்து கொண்ட குறுகிய காலத்தில் அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகை போன்றவற்றை எடுத்துவிட்டு தப்பி ஓடிவிடுவார். இதற்காக அவர் சில தரகர்களையும் வைத்திருந்தார். இது பற்றி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு சர்மா என்பவர் கடந்த 5-ம் தேதி போலீசில் புகார் கொடுத்ததால் தான் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

இது குறித்து அவர் கொடுத்த புகாரில் கூறப்பட்டிருந்ததாவது, நான் திருமண புரோக்கர்களான பப்பு மீனா மற்றும் சுனிதா ஆகியோரிடம் 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்து பெண் பார்த்து தரும்படி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுராதாவை மணமகளாக அறிமுகம் செய்து வைத்த நிலையில் நாங்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் வைத்து பதிவு திருமணம் செய்து கொண்டோம். அதன் பிறகு மே 2-ம் தேதி எங்கள் வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை திருடிவிட்டு அவர் தப்பி ஓடிவிட்டார் என்று கூறியிருந்தார்.

இது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் விஷ்ணுவை ஏமாற்றிய பிறகு அனுராதா கப்பர் என்ற ஒருவரை திருமணம் செய்து இரண்டு லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஒரு கான்ஸ்டபிளை மணமகனாக போலீசார் சித்தரித்து அனுராதாவை வசமாக பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் உத்திரபிரதேசம், ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்களில் மோசடி வேலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. குறிப்பாக 7 மாதத்தில் சுமார் 25 பேரை அவர் திருமணம் செய்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனுராதா மருத்துவமனையில் பணியாற்றி வந்த நிலையில் தன் கணவனை பிரிந்து கோபாலில் தனியாக வாழ்ந்து வந்தார்.

அப்போது திருமண மோசடிகளில் ஈடுபடும் ஏஜெண்டுகளுடன் அவருக்கு பழக்கம் ஏற்படவே அவரும் இந்த மோசடியில் தன்னை உட்படுத்திக் கொண்டார். திருமணம் நடந்து ஒரே வாரத்தில் மணமகனை கழட்டிவிட்டு நகை, பணம், மின் சாதன பொருட்கள் போன்றவற்றை திருடி விட்டு இரவோடு இரவாக செல்வதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.