கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கயிறு ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அருண்குமார் தனது நிறுவனத்தில் வேலை பார்த்த 17 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி ஒரு துணிக்கடையில் வேலைக்கு சென்றார். அங்கு சிறுமி பணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்ததால் துணிக்கடை உரிமையாளர் அருண்குமாரிடம் விஷயத்தை கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அருண்குமார் சிறுமியை அழைத்து மிரட்டியதோடு பிரம்பால் தாக்கியுள்ளார். தனது மகள் பணத்தை எடுத்ததாக நினைத்து சிறுமியின் தந்தையும் அவரை தாக்கியுள்ளார். அப்போதுதான் அருண்குமார் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அருண்குமாரை கைது செய்தனர். அருண்குமார் தாக்கிய போது கண்டு கொள்ளாமல் இருந்த சிறுமியின் தந்தையையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.