தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.digilocker.gov.in, www.tnresults.nic in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் மொத்தமாக 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவிகள் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் வழக்கமாக மாணவர்களை விட மாணவிகள் தான் இந்த வருடமும் தேர்ச்சி அதிகமாக பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது. இங்கு 98.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 97.45 சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 96.76 சதவீதத்துடன் தூத்துக்குடி மாவட்டம் மூன்றாம் இடத்திலும், 96.66 சதவீதத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் நான்காம் இடத்திலும், 96.61% சதவீதத்துடன் திருச்சி மாவட்டம் ஐந்தாம் இடத்திலும் இருக்கிறது.