உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் பகுதியை சேர்ந்த பூனம் என்ற வயதான பெண் தனது மகள் தபஸ்ஸும் காணவில்லை என மஜ்ஹோலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனது மருமகன் ரெஹான் தான் தனது மகளை கடைசியாக அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

அந்த விசாரணையில் தபஸ்ஸும் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்தக் கொலையை அவரது கணவர் ரெஹான் தான் செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது கொலை செய்யப்பட்ட தபஸ்ஸுமின் முன்னாள் கணவர் மறைவிற்குப் பின் 50 கெஜம் நிலத்தை விட்டுச் சென்றுள்ளார். அதன் பின் தபஸ்ஸும் அவரது 5 குழந்தைகளுடன் அதே நிலத்தில் வசித்து வந்துள்ளார்.

அப்போது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரெஹான் என்பவர் தபஸ்ஸுமுடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாற இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் தபஸ்ஸுவும், அவரது குழந்தைகளும் ரெஹானை முழுமையாக நம்பினர். ஆனால் ரெஹான், தபஸ்ஸுமின் முன்னாள் கணவர் விட்டுச் சென்ற நிலத்தை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி, வழக்கம்போல நிலத்தை கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் அதற்கு தபஸ்ஸும் மறுத்ததால் கோபத்தில் தபஸ்ஸுமை அவரது வீட்டில் வைத்து தலையில் செங்கல்லால் அடித்து கொலை செய்து உள்ளார். அதன் பின் அரிவாளால் தபஸ்ஸுமின் தலையை வெட்டி ஒரு பையில் வைத்து அதனுடன் அரிவாளையும் சேர்த்து கங்கணா ஆற்றில் வீசியுள்ளார்.

மேலும் அவரது உடலை வீட்டில் குழியை தோண்டி புதைத்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் ரெஹானிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக அவர் பதில் அளித்ததால் உண்மை வெளிவந்தது. மேலும் ரெஹான்,  தபஸ்ஸுமின் மொபைல் போனை பயன்படுத்தி அவர் உயிருடன் இருப்பது போல நாடகமும் ஆடியுள்ளார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தபஸ்ஸுமின் மொபைல் டேட்டாவும், ரெஹானும் ஒரே இடத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் காவல்துறையினர் ரெஹானை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது 5 குழந்தைகளும் தாயை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டாவது கணவரின் நம்பிக்கை துரோகத்தால் ஏற்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.