
ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பான தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்ட மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, பாஜகவின் சொல்படியே தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்பட்டார் என்பதை மத்திய அரசின் இந்த நடவடிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்த்து வைத்ததை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கால நிர்ணயம் செய்திருப்பதற்கு குடியரசுத் தலைவர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டிருப்பது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை வலுவிழக்க செய்யும் முயற்சி. பாஜக ஆளாத மாநில அரசுகளை முடக்க நினைக்கிறதா மத்திய அரசு? அனைத்து சட்ட வழிமுறைகளையும் பயன்படுத்தி இந்த பிரச்சனையை எதிர்கொள்வோம்.
குடியரசு தலைவரின் செயல் நேரடியாக மாநில அரசின் தன்னாட்சிக்கு சவால் விடுவதாக உள்ளது. பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்கள் இந்த சட்ட போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். தமிழகம் போராடும். தமிழகம் வெல்லும் என முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.