
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பவித்ரா. இந்த தம்பதியினரின் மகன் தன்விஷ்(8) வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது அம்மா, அப்பா உறவினர்கள், கொடுக்கும் பணத்தை தன்விஷ் உண்டியலில் சேமித்து வைத்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் மோதல் ஏற்பட்ட நிலையில் ராணுவ வீரர்கள் எல்லையில் போராடி வருகின்றனர். இதனை அறிந்த தன்விஷ் தான் 10 மாதங்களாக சேமித்து வைத்திருந்த பணத்தை ராணுவத்திற்கு வழங்க முடிவு செய்தார். அதன்படி தன்விஷ் தனது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து கூறும்போது, இந்தியா பாகிஸ்தான் சண்டையின் போது நாட்டுக்காக போரிட்ட ராணுவ வீரர்களின் நலனுக்கு உபயோகப்படுத்தும் வகையில் நான் சேமித்து வைத்த பணத்தை கொடுத்தேன். நம்மை பாதுகாப்பவர்களுக்கு உதவ விரும்பினேன் என மழலை மொழியில் அழகாக பேசியுள்ளார். இதனை அறிந்த பொதுமக்கள் தன்விஷை பாராட்டியுள்ளனர்.