
சேலம் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் டேனியல் என்ற 29 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கென்யாவை சேர்ந்தவர். இவர் வாடகை வீட்டில் தங்கி ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
இவருடன் ஒரே அறையில் நபுகீரா ஹெலன் என்ற 33 வயது பெண்ணும் இருந்துள்ளார். இவர் உகண்டாவை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் ஹெலன் புதுச்சேரியில் படித்து வருகிறார். இதில் ஹெலன் புதுச்சேரியில் இருப்பதைவிட சேலத்தில் காதலனுடன் இருப்பதுதான் அதிகம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் டேனியல் கடந்த 27ஆம் தேதி வீட்டின் மாடியில் இருந்து மது குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென தவறி கீழே விழுந்துவிட்டார். அவருடைய காதலி பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் உதவியோடு அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் டேனியல் மது போதையில் தான் தவறி விழுந்ததாகவும், தங்களுக்குள் எந்த பிரச்சனையும் கிடையாது எனவும் ஹெலன் கூறியுள்ளார்.
இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் மரணமடைந்துவிட்டார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.