திருவள்ளூர் மாவட்டம் ஆரணி வடக்குநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன்(42). இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகாததால் வாசுதேவன் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வாசுதேவனின் தாய் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது,  இவர் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். ஏரி நீரில் மூழ்கி வாசுதேவன்  பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் ஏரியில் ஏதோ ஒன்று மிதப்பதாக நினைத்து அருகில் சென்று பார்த்தபோது ஒரு நபர் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்பு இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினரை வரவழைத்து நீரில் மூழ்கிய வாசுதேவன் உடலை மீட்டனர்.

பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது வாசுதேவன் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.